Sunday, January 26, 2014

ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம்

     உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் நிறைய இருப்பது இயற்கை. அதில் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்பதும் ஓர் ஆசையே.அதிலும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று நினைக்காத மனிதனே இருக்க முடியாது. ஆரோக்கியம் இல்லாத ஒருவனுக்கு வாழ்க்கையில் இன்பமும், மகிழ்ச்சியும் இருப்பதில்லை.

       “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதும் “நொறுங்க தின்றால் நூறு வயது என்பதும் ஆன்றோர் வாக்கு. ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.மனதிலும் உடலிலும் நோயற்ற நிலையே ஆரோக்கியம் என்கிறோம்.

        உயிரை சுமந்து திரிகின்ற இவ்வுடலில் வரக்கூடிய நோய்கள் பல, மனதுக்கு வரக்கூடிய நோய்கள் பல. இவ்விரண்டிலும் நோயிருக்கும் ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய இயலாது. ஆகவே மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

        அப்படிப்பட்ட ஆரோக்கியமான வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்? நோய் வர காரணங்கள் என்ன? வராமல் எவ்வாறு தடுத்துக் கொள்வது? இன்ன இன்ன காரணங்களால் தான் நோய்கள் வருகின்றன என்று இயற்கை மருத்துவர்கள் ஆய்வு செய்து கூறியதோடு, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகளை வாழும் நெறிகள் என வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

        அதன்படி வாழ்கையில் வாழும் நெறிகளைக் கடைப்பிடித்து, உடல் நலனில் அக்கறை செலுத்தி முறையாக வாழ்வோமானால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.

     அதிகாலையில் எழுந்திருப்பதால் சூரிய ஒளியால், நம் கண்களின் நுண்ணிய உறுப்புகள் பாதிக்கப்படாமல் காக்கப்படுகின்றன. பிறகு பல் துலக்கி மலஜலம் கழித்து விடவேண்டும். இல்லையேல் மலம் குடலில் தங்கி விஷ வாய்வை ஏற்படுத்தி உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும்.

    சிறிது தூரம் நடத்தல் அல்லது யோகாசப்பயிற்சி காலை நேரத்தில் சுத்தமான காற்றை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். வாய் வழியாக காற்றை சுவாசிப்பது பல நோய்களுக்கு இடம் கொடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ குளித்து, சுத்தமான துவைத்த ஆடைகளை அணிய வேண்டும். அன்றாட உணவில் காரத்தைக் குறைத்து உயிர்சத்துள்ள உணவுகளை உண்ணுதல் வேண்டும்.தினசரி மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை சேர்த்து வந்தால் வைட்டமின் ஏ அதிகம் கிடைப்பதுடன் மலச்சிக்கல் நோய் வராது.

       உயிர்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உடலுக்கு உயிர்ச்சத்து என்று சொல்லப்படும் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, காரச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் பழங்கள் மற்றும் வேகவைக்காத காய்கறிகளில் அதிகமாக உள்ளன. வாழைப்பழத்தில் கொழுப்புச்சத்து, மாச்சத்து, புரோட்டீனும், குறைந்த அளவு சுண்ணாம்புச் சத்து, செம்புச்ச்சத்து, கந்தகச்சத்து, ஏ.பி.சி.டி.இ. ஆகிய ஐந்து வகையான உயிர்ச்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளதால் கண் பார்வையை அதிகரிக்கச்செய்கிறது. தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

    தினசரி காலையில் ஓர் எலும்மிச்சம் பழச்சாற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிப்பது,மதிய உணவிலே மோரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகமாவதுடன், வயிறு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இரவில் இரண்டு வாழைப்பழமும்,இரண்டு பேரிச்சம் பழமும் சாப்பிட்டு ஒரு டம்ளர் இயற்கை சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வேறு எந்த டானிக்கும் தேவைப்படாது. உடலுக்கு சக்தியையும், அழகையும் தரும்.

   அவரவர் உழைப்புக்குத் தகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். அதிக கடினமான வேலை செய்பவர்களுக்கு அதிக உணவு தேவைப்படும்.அவர்களுக்கு எரிசக்தி அதிகம் செலவானதால் அதிக உணவு உண்ண வேண்டும்.

   உணவு உண்ணும்போது அவசர அவசரமாக உண்ணக்கூடாது. மன அமைதியுடன் உணவை விரும்பி உண்ண வேண்டும். உணவுக்கு இடையில் தண்ணீர் அருந்தக்கூடாது. பகலில் முக்கால் வயிறு உணவும், இரவில் அரைவயிறு உணவும் உண்பது ஆரோக்கியத்திற்கு இடமளிக்கும். உணவு உண்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் சக்தியிழந்து போகும்.

    வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பதை வழக்கத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். நல்லெண்ணெய் தலைக்கும், உடலுக்கும் தேய்த்து முப்பது நிமிடம் கழித்து சீகைக்காய் அல்லது பாசிப்பருப்பு மாவு போட்டுக் குளித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். கண் குளிர்ச்சியாக இருக்கும். காலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இளம் வெயிலில் சிறிது நேரம் இருப்பதால் சூரிய வெளிச்சம் தோலின் மேல் பட்டு வைட்டமின் ‘டி சத்து நம்  தோலுக்கு  மினுமினுப்பையும் தோல் நோய் வராமலும் பாதுகாக்கிறது.எலும்பு வலுவாக தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. 
  

  வாழ்க்கையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை. புகை,போதை, புலால் இவற்றைத் தவிர்ப்பது, போதிய ஓய்வு, இருக்கும் இடம், உடுத்தும் உடை இவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது, உண்ணும் உணவில் அறுசுவைகளை அளவோடு சேர்ப்பது, மனக்கவலைக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, இவை போன்ற பழக்கங்களைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே கற்றுத்தர வேண்டும்.

 நன்றி !

3 comments:

  1. சிறப்பானதொரு கட்டுரைக்கு நன்றி டாக்டர் தீபா.

    தொடர்ந்து எழுதுங்கள், அது எங்களுக்கு உதவும்.

    நன்றி

    ReplyDelete
  2. நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள்,
    படங்களை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete