Sunday, November 17, 2013

யோகாசனம் . ஓர் அறிமுகம்.

'Yuj' என்ற வார்த்தை தான் மருவி யோகா என்றானது.  யோகம்  என்பதற்கு இணைப்பு அல்லது சேர்ப்பு என்று அர்த்தமாகும். 'ஆசனம்' என்பதற்கு 'இருக்கை' என்று பொருளாகும். ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் நிலையாக, சில நிமிடம் இருத்தல் 'யோகாசனம்' எனப்படும். 

நாம் வாழும் வாழ்க்கையில் உணவு, உடை, உறக்கத்திற்கு தரும் அதே முதலிடத்தை ஆரோக்கியமான, நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். உடற்பயிற்சியானது உடலை அழகுபடுத்தி, உற்சாகம் தருவது மட்டுமன்றி, மனதிற்கு தேவையான உற்சாகத்தையும், அமைதியும் தருகிறதா என்று கவனித்தல் வேண்டும். அப்படி மனதையும் உடலையும் ஒருங்கே பண்படுத்தும் கலையே யோகக்கலை ஆகும்.

யோகா என்பது ஓர் அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி கலையாகும். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களும், முனிகளும், ரிஷிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது மேலை நாடுகளில் நாமே வியக்கும் வண்ணம் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

கீதையில் யோகத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் செலுத்தினால் மனம் தெளிந்து அமைதி கிடைக்கும் என்றும், அலை பாய்ந்து தவிக்கும் நமது உள்மன கேள்விகளுக்கு நம்மிடமிருந்தே பதில் கிடக்கும் என்று கூறுகிறது.

நம் மனநிலையானது மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது. 

1. மூதா (Moodha)

2. சிப்த்தா (Kshipta)

3. நிக்சிப்த்தா (Nikshipta)

இதில் "மூதா" என்னும் மன நிலையின் முக்கிய வேர்கள் பற்று, பேராசை, கோபம், மாயை போன்றவையாகும். இதன் முக்கிய குணங்களான தூக்கம், பயம், சோம்பல், பிறருக்கு உதவாமை போன்றன இம்மனநிலையில் உள்ள மனிதருக்கு காணப்படும்.

'சிப்த்தா' மனநிலையில் உள்ளவன் அறியாமையில் இருப்பான். அவன் சரி எது? தவறேது? பாவம், புண்ணியம், பற்று, பற்றின்மை, அறிவு, அறிவீனம் என்று பிரித்தறியா நிலையில் இரண்டும் கெட்டானாக இருப்பான்.

'நிக்சிப்த்தா'  நிலை என்பது கரும யோகத்தின் மூலம் நல்லவைகளை அடைதல். இந்நிலையில் உள்ள மனிதன் மகிழ்ச்சி, மன்னிக்கும் தன்மை, தெய்வ பக்தி, பொறுமை, கருணை, சகிப்புத்தன்மை மற்றும் தன்னம்பிக்கை உள்ளவனாக காணப்படுவான். இந்நிலையில் உள்ளவன் நல்ல அறிவை பெற்றிருப்பான். பற்று என்பது மாயை என்பதை புரிந்திருப்பான். 

யோகா பயிற்சிகள் ஒரு மனிதனை "மூதா", "சிப்த்தா" போன்ற கீழான நிலையிலிருந்து உயர்ந்த நிலையான "நிக்சிப்த்தா" நிலைக்கு கொண்டு செல்லும்.

இப்பயிற்சிகள் பல வகைகளாகவும், நிலைகளாகவும் உள்ளன. இதில் ஒரு சில வகை ஆசனங்களை தினமும் பயிற்சி செய்து வந்தாலே போதும், நம் உடல் ஆரோக்கியமாகவும், மனம் அமைதியாகவும் இருக்கும். நல்ல தூக்கம் வரும். 

இளமையை மெருகேற்றவும், முதுமையை தள்ளி போடவும் உதவும் யோகாசனங்களை  இத்தொடரில் எளிமையாக விளக்கவுள்ளோம். 



No comments:

Post a Comment